×

புதுகை அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலையுடன் பிறந்த குழந்தைக்கு ரத்தமாற்று சிகிச்சை-3 முறை சாமர்த்தியமாக மாற்றி காப்பாற்றிய மருத்துவர்கள்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி ராணியார் தாய்சேய் நல ஒப்புயர்வு மையத்தில் பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தையை ரத்தமாற்று சிகிச்சை முறை மூலம் மருத்துவர்கள் காப்பாற்றினர்.புதுக்கோட்டை அசோக் நகரை சேர்ந்த சுகன்யா-சுந்தர்ஜி தம்பதிக்கு தனியார் மருத்துவமனையில் இரண்டாவது பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை மஞ்சள் காமாலையுடன் இருந்ததையடுத்து மேல் சிகிச்சைக்காக அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பச்சிளங்குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு போட்டோ தெரப்பி சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு உடனே ரத்தப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. சோதனையில் ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை மூளையை பாதிக்கும் அளவிற்கு இருந்ததையடுத்து உடனே தொப்புள் கொடியில் சிறு குழாய் செழுத்தி அதன் மூலம் ரத்தமாற்று சிகிச்சை செய்யப்பட்டது.

தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதையடுத்து தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மறுபரிசோதனையின் போது மஞ்சள் காமாலையின் அளவு மிக அதிகமாக இருந்தையடுத்து மீண்டும் தொப்புள் கொடியின் வழியே ரத்தமாற்று சிகிச்சை செய்யப்பட்டது. மஞ்சள் காமாலை மூளையை பாதிக்காமல் இருக்கும்பொருட்டு ஐ.வி.ஐ.ஜி என்ற இம்யூனோகுளோபுளின் சிறப்பு மருந்தும் செலுத்தப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு பிறகு மஞ்சள் காமாலை மீண்டும் உயர்ந்ததையடுத்து இறுதி முயற்சியாக மீண்டும் ஒருமுறை ரத்தமாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதர சிகிச்சைகளான போட்டோதெரபி, ஆன்டிபயாடிக் மருந்துகள் மற்றும் வலிப்பு மருந்துகளும் தொடர்ந்து வழங்கப்பட்டதையடுத்து படிப்படியாக மஞ்சள் காமாலையின் அளவு குறைந்து குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 5 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு பாலாடை மூலம் படிப்படியாக தாய்ப்பால் கொடுக்கப்பட்டு பிறகு தாயிடம் நேரடியாக கொடுக்கப்பட்டது. இரண்டு வார சிகிச்சைக்குப்பிறகு நல்ல உடல் நலத்துடன் குழந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் சுமார் 3 லட்சம் வரை செலவாக கூடிய இந்த சிகிச்சை அரசு ராணியார் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் மரு.பூவதி தெரிவித்தார்.மேலும், பச்சிளங்குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. பூவதி பாராட்டினார். மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.ராஜ்மோகன், நிலைய மருத்துவ அதிகாரி மரு.இந்திராணி மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு நோடல் அலுவலர் மரு.பீட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Newest State Hospital , Pudukkottai: Pudukkottai Medical College Raniyar Taisei with jaundice at birth
× RELATED தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம்...